search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்கட்ட வேட்பாளர்கள்"

    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 பேரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். #LSPolls #MNM
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று வெளியிட்டார்.

    மத்திய சென்னையில், கமீலா நாசர், வடசென்னையில் முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். முதல் வேட்பாளர் பட்டியலில் 3 மருத்துவர்கள், 5 வக்கீல்கள், முன்னாள் ஐஜி, முன்னாள் நீதிபதி ஆகியோரும் 8 தொழில் அதிபர்களும் வேட்பாளர்களாகி உள்ளனர்.

    21 பேரில், 15க்கும் மேற்பட்டோர் 40 வயதுக்கும் கீழானவர்கள். அனைவருமே பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இதில் 3 பேர் எம்.பில். பட்டதாரிகள்.

    2-வது கட்ட பட்டியல் விரைவில் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென்சென்னையிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

    ‘கரைவேட்டி இல்லாத, கட்சிக்கொடி பறக்காத வித்தியாசமான வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியுள்ளார். இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். ஒரு பூத்துக்கு 9 பேர் வீதம், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 4500 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மார்ச் 24-ந்தேதி வெளியிடப் போகும் தேர்தல் வாக்குறுதிகளோடு, தொகுதியின் முக்கியமான பிரச்சினைகளையும் மையமாக வைத்து பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு கமல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாத கடைசியில் இருந்து பிரசார சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

    ரசிகர் மன்றத்தை சார்ந்த ஒருவர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அடுத்த வேட்பாளர் பட்டியலில் சிநேகன் பெயரும் இடம்பெற உள்ளது.

    முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் கமல் கூறியதாவது:-

    எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களின் ஆதார தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் கவனம் செலுத்தியுள்ளோம். குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    என் சின்ன வயதில் இருந்தே ஈர்த்த வாக்குறுதிகளைதான் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அளித்துள்ளன. அதை செயல்படுத்ததான் அவர்களால் முடியவில்லை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் களமிறங்கி உள்ளோம்.

    நமது தமிழ் நாட்டை ஆங்கிலத்தில், ‘லேன்ட் ஆப் ரைசிங் சன்’ என்பார்கள். அந்த சன், சூரியனல்ல, வாரிசுகள் என்பது இப்போதுதான் புரிகிறது

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை 2 கட்டமாக பார்க்க வேண்டும். சட்டம், கருணை. இப்போது கருணை தேவை என்று நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட பயப்படவில்லை.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LSPolls #MNM
    ×